search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் 15 சதவீத விபத்துகள் ஏற்படுகிறது- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    கோவை மாவட்டத்தில் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் 15 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.
    கோவை:

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

    கோவையை அடுத்த அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 2 நாட்களில் நடந்த விபத்துகளில் 3 பேர் பலியாகி உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் சாலை தடுப்பான்கள் வைத்து வாகனங்களின் வேகத்தை குறைத்து வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இனி அங்கு விபத்து நடைபெறுவது தடுக்கப்பட வாய்ப்புள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 25-ந் தேதி வரை 1,502 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 382 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் அதே கால கட்டத்தில் 1,317 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 297 பேர் இறந்துள்ளனர். நடப்பு ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3 கோடியே 20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டியில் இருந்து மதுக்கரை சோதனை சாவடி வரை உள்ள சாலையில் தான் அதிக விபத்து நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அந்த சாலை இருவழியாக இல்லாமல், வாகனங்கள் போவதும், வருவதும் ஒரே சாலையாக இருப்பதே காரணம் ஆகும்.

    கடந்த ஒரு மாதத்தில் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் இறந்து கிடந்த நாய் மீது மோதாமல் இருக்க இரு சக்கர வாகனத்தில் வந்தவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்திருந்த பெண் கீழே விழுந்து இறந்தார். கோவை மாவட்டத்தில் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் தான் 15 சதவீத விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    மேலும் வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை கடைபிடித்து முறையாக செல்ல வேண்டும். வாகனங்களின் பின்னால் உட்கார்ந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு வாகன ஓட்டுனர்கள் செல்ல வேண்டும். அப்போது தான் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×