search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசுகள்
    X
    பட்டாசுகள்

    கொரோனா அச்சுறுத்தலால் ஆர்டர்கள் குறைவு- தீபாவளி பட்டாசுகள் ஏற்றுமதி பாதிப்பு

    பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு உற்பத்தியாளர்கள் வந்தபோது உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் மீண்டும் தொழில் பின்னடைவை சந்தித்துள்ளது.
    விருதுநகர்:

    நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த திருநாளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது மிக முக்கியமான நிகழ்வாகும்.

    ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை பட்டாசு இல்லாமல் கொண்டாடப்படுவதில்லை. பட்டாசு உற்பத்தியில் முன்னிலையில் இருப்பது தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் தான்.

    இங்கு சுமார் 1,100 பட்டாசு ஆலைகள் உள்ளன. அதிலும் “குட்டி ஜப்பான்” என அழைக்கப்படும் சிவகாசியில் இருந்துதான் 90 சதவீதம் பட்டாசுகள் உற்பத்தி ஆகின்றன.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு உற்பத்தி பாதிப்பையே சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் மாசு கட்டுப்பாடு பிரச்சனையால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    அதன் பிறகு பசுமை பட்டாசு தயாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டபோது அதனை தயாரிப்பது எப்படி? என சில பட்டாசு ஆலைகள் கேள்வி எழுப்பின.

    அதனை சமாளித்து பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தபோது உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் மீண்டும் தொழில் பின்னடைவை சந்தித்தது.

    வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு ஆர்டர்கள் அந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலே தொடங்கி விடும். தொடர்ந்து அடுத்தடுத்து வெளிமாநில ஆர்டர்கள் வரும். அதன் அடிப்படையில் பட்டாசு உற்பத்தியும் வேகம் பிடிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆர்டர் தொடங்கிய 2 மாதத்தில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது.

    இதன் காரணமாக மார்ச் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பட்டாசு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு காலத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் உற்பத்தியை தொடங்கலாம் என அரசு அறிவித்த நிலையில் மூலப்பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.

    மேலும் ஹோலி, விநாயகர் சதுர்த்தி, ஓணம், தசரா உள்ளிட்ட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் பட்டாசு ஆர்டர்கள் வரவில்லை.

    தற்போது அனைத்து நிறுவனங்களும் முழு வீச்சில் இயங்க அரசின் அனுமதி உள்ளது. பட்டாசு ஆலைகளும் முழுமையாக திறக்கப்பட்டு உற்பத்தியை தொடங்கின. ஆனால் ஆர்டர்கள் குறைவு காரணமாக உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க (டான்பாமா) தலைவர் சோனி கணேசன் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி உரிமம் பெற்ற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

    கடந்த ஆண்டு பட்டாசு ஆலைகள் நீதிமன்ற வழக்கு காரணமாக 100 நாட்கள் மூடப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா காரணமாக 40 நாட்கள் மூடப்பட்டன. இதனால் உற்பத்தி மற்றும் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.

    கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் பட்டாசுகள் விற்பனை ஆவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த விற்பனை பாதிக்கப்பட்டது.

    தற்போது தசரா திருவிழாவிற்காக பட்டாசு வாங்க 70 சதவீத ஆர்டர்கள் வந்தன. தீபாவளி விரைவில் வர இருக்கும் நிலையில் மீதம் உள்ள 30 சதவீத ஆர்டர்களும் கிடைக்கும் என நம்புகிறோம்.

    உள்நாட்டில் பட்டாசு விற்பனை சீரடைந்தாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஐரோப்பிய நாடுகளைவிட ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படும். கொரோனா ஊரடங்கால் இது பாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது கப்பல் கட்டணம் 10 மடங்கு அதிகரித்து இருப்பதால் ஏற்றுமதி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதனை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×