search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் பரபரப்பு: ஓட்டல் அதிபர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து வாலிபர் காயம்

    ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்ப தகராறு காரணமாக ஓட்டல் அதிபர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து வாலிபர் காயம் அடைந்தார்.
    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் புதிய மேம்பாலம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 4-வது மாடியில் வசித்து வருபவர் சையது இப்ராகிம். 57 வயதான இவர் பாரிமுனையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சையது இப்ராகிமின் மனைவி பர்கத் நிஷா. இவர்களுக்கு 3 மகள்கள். அனைவரும் திருமணம் ஆகி வெளியில் வசித்து வருகிறார்கள்.

    இதனால் சையது இப்ராகிமும், பர்கத் நிஷாவும் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் பர்கத் நிஷாவின் அக்காள் மகன் அன்சாருதீன் அடிக்கடி சையத் இப்ராகிம் வீட்டுக்கு சென்று வந்தார். இது சையது இப்ராகிமுக்கு பிடிக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்றும் சையது இப்ராகிமின் வீட்டுக்கு அன்சாருதீன் சென்றிருந்தார். நள்ளிரவு 11.15 மணி அளவில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாகவும் மாறியதாக கூறப்படுகிறது.

    அப்போது இருவரையும் சமாதானப்படுத்த பர்கத் நிஷா முயன்றார். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

    இந்த நேரத்தில் திடீரென சையது இப்ராகிம் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அன்சாருதீனை நோக்கி சுட்டார். இதில் அவரது இடது உள்ளங்கையில் குண்டு பாய்ந்தது. இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அன்சாருதீன் அலறி துடித்தார். துப்பாக்கியால் சுட்டபோது சையது இப்ராகிமின் இடது மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அன்சாருதீன் ஸ்டான்லி மருத்துவமனையிலும், சையது இப்ராகிம் ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சத்தத்தை கேட்டு குடியிருப்பு வாசிகள் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியில் வந்தனர். பின்னர் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராயபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சையது இப்ராகிம் பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கி என்று கூறப்படுகிறது. குடும்ப தகராறுக்காக அதனை அவர் எப்படி பயன்படுத்தினார் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×