search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி கூலித்தொழிலாளி கைது

    பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக்கோரி பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    பட்டிவீரன்பட்டி:

    பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் பிரிவில் வசிப்பவர் பாண்டி என்ற சின்ன பாண்டி (வயது 31). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு ஆதிலட்சுமி என்ற மகளும், மரகதவேல் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 9 மாதங்களாக தனது குழந்தைகளுடன் ஜெயலட்சுமி மதுரை கொடிக்குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு, மதுரைக்கு சென்று ஜெயலட்சுமியை பாண்டி பலமுறை அழைத்தார். ஆனால் ஜெயலட்சுமி வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாண்டி மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்தநிலையில் பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு பெட்ரோல் கேனுடன் பாண்டி நேற்று வந்தார். சிறிதுநேரத்தில் அவர், தான் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக்கண்ட போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து காப்பாற்றினர். தக்க சமயத்தில் போலீசார் பார்த்ததால் பாண்டி உயிர் தப்பினார்.

    இதற்கிடையே தற்கொலைக்கு முயன்றதாக பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தற்கொலைக்கு முயற்சித்த பாண்டி குடும்ப பிரச்சினை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. தனது மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தன்னுடன் சேர்த்து வைப்பதற்காக போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார் என்றனர்.

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நேற்று விஷம் குடித்து விவசாயி ஒருவர் பரிதாபமாக இறந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தின் முன்பு கூலித்தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் இனிவருங்காலத்தில் போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×