search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் கலெக்டர்
    X
    பெரம்பலூர் கலெக்டர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் சாந்தா எச்சரிக்கை

    பெரம்பலூர் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தா எச்சரித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1,615 டன் யூரியா, 608 டன் டி.ஏ.பி., 1,317 டன் பொட்டாஸ் மற்றும் 4,080 டன் காம்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்த உர விற்பனையாளர்கள் வெளிமாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும் விற்பனை செய்திடவும் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது. சில்லரை உர விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.

    சில்லரை உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும்போது கட்டாயமாக ஆதார் அட்டை கொண்டு கைரேகை பதிவு செய்து உரம் விற்பனை மேற்கொள்ளவேண்டும். ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை நடைபெற்றது கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.

    திடீர் ஆய்வின்போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு குற்ற வழக்கு தொடரப்படும். விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும்போது ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும். உரம் வாங்கும்போது உரிய விற்பனை பட்டியல் கேட்டு பெறவேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த புகார்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரம்பலூரை அலுவலகத்தை 9443590920 என்ற செல்போன் எண்ணிலும், ஆலத்தூர் அலுவலகத்தை 9655721891 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை அலுவலகத்தை 9442746911 என்ற எண்ணிலும், வேப்பூர் அலுவலகத்தை 8825631615 என்ற எண்ணிலும் அல்லது வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை 9789225751 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். எனவே, பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×