search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
    X
    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 340 சாலை விபத்துகளில் 102 பேர் உயிரிழப்பு - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் நடந்த 340 சாலை விபத்துகளில் 102 பேர் உயிரிழந்துள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிவதன் அவசியம் குறித்து போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பஸ்நிலையம், காமராஜர் வளைவு வழியாக புதிய பஸ் நிலையம் வந்து, நான்கு ரோடு, மூன்று ரோடு வழியாக மீண்டும் பாலக்கரை ரவுண்டானாவை அடைந்து முடிவடைந்தது.

    இருசக்கர வாகன ஊர்வலத்தில் கலந்து கொண்ட போலீசார் ஹெல்மெட் அணிந்திருந்தனர். மேலும் அவர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர். இதில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவஹர்லால், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரைக்கும் மொத்தம் 340 சாலை விபத்துகள் நடந்ததில், 102 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளில் 250-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களால் ஏற்பட்டது. விலைமதிக்க முடியாத மனித உயிர்களை இழப்பதை தவிர்க்க இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தி விட்டும் வாகனங்களை ஓட்டாதீர்கள்.

    வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தற்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசாரை வைத்து இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தப்படுகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தினமும் சுமார் 500 வழக்குகள் பதிவாகி வருகின்றன. நடப்பாண்டில் சாலை விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 1 லட்சத்து 42 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 63 ஆயிரம் வழக்குகள் அதிகம். நடப்பாண்டில் 1 லட்சத்து 14 ஆயிரம் வழக்குகள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது போடப்பட்டுள்ளது, என்றார்.
    Next Story
    ×