search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஐகோர்ட்டு
    X
    மதுரை ஐகோர்ட்டு

    கொரோனா தொற்று இல்லாத நிலையில் தம்பதியிடம் வசூலித்த ரூ.7 லட்சத்தை திருப்பி தர மறுக்கும் மருத்துவமனை

    கொரோனா தொற்று இருப்பதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கணவன்-மனைவியிடம் வசூலித்த ரூ.7 லட்சத்தை திருப்பி தரக்கோரிய வழக்கில் மருத்துவ கவுன்சிலுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    கொரோனா தொற்று இருப்பதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கணவன்-மனைவியிடம் வசூலித்த ரூ.7 லட்சத்தை திருப்பி தரக்கோரிய வழக்கில், மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவ கவுன்சிலுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை ராஜாமில் ரோடு பகுதியை சேர்ந்த நேரு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நானும், எனது மனைவியும் காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மதுரை வைத்தியநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றோம். கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி எங்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவருக்கும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும், இதற்கான சிகிச்சைக்கு முன்பணமாக ரூ.8 லட்சம் செலுத்தினால்தான் சிகிச்சைக்கு அனுமதிப்போம் என்று கூறினர். இந்த தொகையை கடன் வாங்கி செலுத்தினோம்.

    கொரோனா பரிசோதனை முடிவில் நோய்த்தொற்று இல்லை என்று கூறி, எங்களை டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து நாங்கள் முன்பணமாக செலுத்திய தொகையை திருப்பி கொடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டோம்.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை மட்டும் திருப்பி வழங்கியது. மீதமுள்ள தொகையையும் கொடுக்க வேண்டும் என்று பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. சட்டப்படி கடந்த மாதம் 5-ந்தேதி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியும், பதில் இல்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும், நாங்கள் செலுத்திய முன்பணத்தை திருப்பி கொடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை எதிர்மனுதாரராக சேர்த்து, இந்த வழக்கு குறித்து பதில் அளிக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:- டாக்டர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி டாக்டர்கள் கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வது அவசியம். ஆனால் மனுதாரர், அவரது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.3 லட்சம் மட்டும் பெறப்பட்டது என மருத்துவமனை தரப்பில் கூறுவதை ஏற்க இயலாது. இதேபோல நாகேந்திரன் என்பவரிடமும் ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் கட்டணமாக இந்த மருத்துவமனை நிர்வாகம் பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    அவர் டிஸ்சார்ஜ் ஆன பின், ரூ.40 ஆயிரம் சிகிச்சை கட்டணம் என ரசீது கொடுத்துள்ளனர். மீதி தொகையை திருப்பி கொடுக்க வலியுறுத்தி, போலீசில் புகார் செய்தார். பின்னர் இந்த கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, மருத்துவமனை நிர்வாகம் மீதி தொகையை திருப்பி செலுத்தியதாக நாகேந்திரனின் வக்கீல் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழக்கு தொடர்ந்தவருக்கு மட்டும் அவர் செலுத்திய தொகையை திருப்பி கொடுக்காதது ஏன்? இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் மனுதாரர் புகார் அளிக்கலாம். இந்த புகாரை அவர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×