search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இந்து முன்னணி பிரமுகர் கொலையில் மேலும் 3 பேருக்கு தொடர்பு - விசாரணை முடிந்து முக்கிய ஆசாமி சிறையில் அடைப்பு

    இந்து முன்னணி பிரமுகர் கொலை தொடர்பாக முக்கிய ஆசாமியான ஆறுமுகத்திடம் விசாரணை முடிந்ததும் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    கோவை:

    கோவை ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பிஜு (வயது37). இந்து முன்னணி பிரமுகர். இவர் கோவை ராம்நகர் பகுதியில் சோடா கடை நடத்தி வந்தார். மேலும் வட்டிக்கும் பணம் கொடுத்து வசூலித்து வந்தார். கடந்த 15-ந்தேதி பிஜு கடையில் இருந்த போது ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தது. இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் (25), ராஜா (24), பிரவீன் (24), அரவிந்த் (22), இளையராஜா (24), விவேக் பிரபு (25) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த கொலையில் முக்கிய ஆசாமியான ஆறுமுகம் (56) சிவகங்கை கோர்ட்டில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து ஆறுமுகத்தை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர், பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார். தனது மகன் நிதீஷ்குமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவானந்தாகாலனி பகுதியில் 2 பேர் கத்தியால் குத்தினார்கள். பிஜுவின் ஆதரவாளர்கள் தான் தனது மகனை கொலை செய்ய முயன்றதாக ஆறுமுகம் சந்தேகித்தார். எனவே பிஜுவை கொலை செய்துவிட்டால் தங்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள் என்று ஆறுமுகம் கருதினார். அதன்படி, அவரை பழி வாங்க மகனின் நண்பர்களை கூலிப்படை போல் ஏவிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. போலீசில் ஆறுமுகம் கூறும்போது, காந்திபுரம் பகுதியில் தான் பெல்ட் கடை நடத்தி வருவதாகவும், தனது மகனை பிஜுவின் ஆட்கள் 2 முறை கொலை வெறியுடன் ஆயுதங்களால் தாக்கினர். எனவே அவரை கொன்றால்தான் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் நினைத்தேன். இதற்கு எனது மகனின் நண்பர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி திட்டமிட்டு பிஜுவை தீர்த்து கட்டியதாக கூறினார்.

    இதற்கிடையே 4 நாள் போலீஸ் காவலில் எடுத்த ஆறுமுகத்திடம் தேவையான தகவல் பெற்றதால் 2 நாட்களில் போலீசார் விசாரணையை முடித்தனர். நேற்று மாலை ஆறுமுகத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 7 பேர் பிடிபட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் 3 பேரை பிடிக்கவும், கொலைக்கு பயன்படுத்திய வாகனங்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×