search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மனைவியை அபகரித்ததால் காண்டிராக்டர் மகனை கடத்தி பழிவாங்கிய கட்டிடத்தொழிலாளி கைது

    திருப்பூரில் மனைவியை அபகரித்ததால் காண்டிராக்டர் மகனை கடத்தி பழிவாங்கிய கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் அடுத்துள்ள பொன்முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 30). கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி நீலாவதி (25). இவர்களது மகன் நவீஸ் சத்யா (3).

    காண்டிராக்டர் முருகானந்தத்துடன் கடலூர் மாவட்டம் விருதாலசத்தை சேர்ந்த சுரேஷ் (27) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று சிறுவன் நவீஸ் சத்யா திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர். எங்கும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து சுரேசும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. பெற்றோர் திருப்பூர் நல்லூர் போலீசில் இது குறித்து புகார் செய்தனர்.

    வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ் சிறுவனை சேலம் கடத்திச்செல்வது தெரியவந்தது. இதனையடுத்து நல்லூர் போலீசார் சேலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சேலம் போலீசார் திருப்பூரில் இருந்து வரும் பஸ்களை தீவிர சோதனை செய்தனர்.

    சேலம் பள்ளப்பட்டியில் பஸ்சில் இருந்து சிறுவனுடன் இறங்கிய சுரேசை போலீசார் பிடித்தனர். இது குறித்து திருப்பூர் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவோடு இரவாக சேலம் சென்ற போலீசார் சுரேஷ் மற்றும் சிறுவனை மீட்டு திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.

    நல்லூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது சுரேஷ் குழந்தையை கடத்தியதற்கான காரணத்தை அவர் கூறுகையில், எனது மனைவியை முருகானந்தம் அபகரித்து தனியே தங்க வைத்துள்ளார். என்னுடன் குடும்பம் நடத்தவர மறுத்து விட்டார். இதனால் எனது மனைவியை என்னுடன் அனுப்பி வைத்தால் தான் உனது மகனை திருப்பி தருவேன் என்று மிரட்டுவதற்காக சிறுவனை கடத்தினேன் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து சிறுவனை பெற்றோருடன் ஒப்படைத்த போலீசார் சுரேசை கைது செய்தனர். சுரேசின் மனைவியை முருகானந்தம் அபகரித்தது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×