search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புற்றுநோயால் 3 வயதிலேயே படுத்த படுக்கையான சிறுவன் - ஊரடங்கால் சிகிச்சை அளிக்க முடியாமல் பெற்றோர் வேதனை

    புற்றுநோய் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கைக்கு சென்ற சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் அவரது பெற்றோர் தவித்து வருகிறார்கள்.
    களியக்காவிளை:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை தேனாம்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சிங் -அருள் அபிஷா. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஜெர்சித் என்ற மகன் உள்ளான். இவனுக்கு 2 வயதில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுவனுக்கு கேரள மாநிலம் ஆர்.சி.சி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அப்போது, ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் அகற்றப்பட்டது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக சிகிச்சைக்கு கேரள மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலேயே அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சிறுவனுக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கைக்கு சென்று விட்டான். தற்போது அந்த சிறுவனுக்கு 3 வயது. வாழ்வின் கடைசி கட்டத்தில் சிறுவன் இருப்பதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக கேரளாவுக்கு அழைத்துச் செல்ல அங்குள்ள அரசிடம் அனுமதி கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.

    இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லையே என பெற்றோர் துடித்து வருகிறார்கள். மேலும், கேரள ஆர்.சி.சி. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற கேரள அரசிடம் அனுமதி பெற்று தருமாறு தமிழக அரசுக்கு அந்த சிறுவனின் பெற்றோர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


    Next Story
    ×