search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    320 ஆண்டுகள் பழமையான சதிக்கல்.
    X
    320 ஆண்டுகள் பழமையான சதிக்கல்.

    அருப்புக்கோட்டை அருகே 320 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுப்பு

    அருப்புக்கோட்டை அருகே 320 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் விஜயராகவன் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரத்தில் கி.பி 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் உள்ளது. இந்த கல் 320 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த கல் வீர மன்னன் என்ற பெயரில் வழிபாடு செய்யப்படுகிறது.

    சதிக்கல் என்பது தன் இனக்குழுவை காக்கவோ, நாட்டை காக்கவோ, போரில் வீர மரணமடைந்த கணவரின் உடலோடு அவனது மனைவி தீமூட்டி உயிரை மாய்த்து உடன் கட்டை ஏறும் நிகழ்விற்கு சதி என்று பெயர்.

    மரணத்தை தழுவிய கணவன், மனைவி ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் அவர்களது உருவங்களை சிற்பமாக செதுக்கி பொதுமக்களும் அவற்றை வழிபடுவர்.

    ராமானுஜபுரத்தில் உள்ள சதி சிற்பமானது ஏறுதழுவலின் போது இறந்த வீரரின் சிற்பமாகும். இந்த கல்லானது 66 செ.மீ. உயரமும், 58 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த சிற்பத்தில் வீரனின் தலை முடியானது பின்புறமாக போடப்பட்டுள்ளது. காதுகளில் அணிகலன்கள் போடப்பட்டுள்ளது. வீரனின் கழுத்திலும் அணிகலன்கள் இருக்கின்றன. இரு புஜங்களிலும் தோள் வளையம் அணிந்து இருக்கிறான். அவனுடைய இடது கரத்தில் உள்ள வால் மேல் நோக்கியுள்ளது. அந்த வீரன் சிற்பத்தின் கீழே ஏறுதழுவுதலின் அடையாளமாக 2 மாடுகள் இருக்கின்றன. வீரனின் அருகில் பெண் சிற்பம் உள்ளது.

    அந்த பெண் சதி மேற்கொண்ட அடையாளமாக வலது கை தோளிலிருந்து எல் வடிவம் போல் உயர்த்தி உள்ளது.

    அந்த பெண் காதுகளில் அணிகலன், கழுத்தில் கழுத்தாணி, தோள் வளையம், கையில் வளையலும் அணிந்துள்ளார்.

    அந்த பெண் அருகே சிறிய அளவில் இன்னொரு பெண் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளன. அவள் கையில் மங்கள பொருட்கள் வைத்து உள்ளார். அவரை தான் அப்சரப்பெண் (வான் உலக மங்கையர்) என்று அழைக்கப்படுகிறார். இறந்த வீரரை வானுலக மங்கையர் கைகூப்பி வானுலகிற்கு அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் பெண் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளன.

    கல் வீர மன்னன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த சதி கோவிலை தெலுங்கு மொழி பேசும் மக்கள் வழிபாடு செய்கின்றனர். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியும், சித்திரை மாத பவுர்ணமி அன்று ஊர் கூடி திருவிழாவாக இந்த மக்கள் கொண்டாடுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×