search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தியவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தியவர்களை படத்தில் காணலாம்.

    பிரசவத்தில் இளம்பெண் திடீர் பலி: ஆஸ்பத்திரி மீது தாக்குதல் - ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

    கொட்டாரத்தில் பிரசவத்தில் பெண் இறந்ததை தொடர்ந்து ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன், அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    தென்தாமரைகுளம்:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் காலேஜ் ரோட்டை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி பவித்ரா (வயது 26). சுரேஷ்குமார், சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் கர்ப்பிணியான பவித்ரா, கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் காலையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு பவித்ராவுக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டது.

    உடனே அவர், கன்னியாகுமரியில் உள்ள வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    பவித்ராவுக்கு டாக்டர்கள் இல்லாமல் நர்ஸ் மட்டுமே பிரசவம் பார்த்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், முறையான சிகிச்சை அளிக்காததால் தான் பவித்ரா இறந்ததாகவும் உறவினர்கள் புகார் கூறினர்.

    தொடர்ந்து பவித்ராவின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.விடம், அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே நேற்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த பவித்ராவின் உறவினர்களும், பொதுமக்களும் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    விசாரணையை முடித்துவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த அதிகாரிகள் கூறுகையில், ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தி இருக்கிறோம். பவித்ராவுக்கு பிரசவம் நடந்த போது பணியில் இருந்தவர்கள் எத்தனை பேர், பிரசவம் பார்த்தது யார்? உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தி இருக்கிறோம். ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான், இறப்புக்கு காரணம் தெரிய வரும் என்றனர்.

    ஆனால் அங்கு கூடி இருந்த மக்கள் இதனை ஏற்று கொள்ளவில்லை. ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். திடீரென ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தினர். அதாவது அங்கு கிடந்த கற்கள், செங்கற்களை எடுத்து ஆஸ்பத்திரி மீது வீசினர். இதில் ஆஸ்பத்திரி பெயர் பலகை, ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரி காரில் ஏறி அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனால் திரண்டு இருந்த மக்கள் அதிகாரியின் காரை சிறைபிடித்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு திடீரென பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    தொடர்ந்து பொதுமக்கள் ஆஸ்பத்திரியின் முன் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்க வேண்டும் என்று மீண்டும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை (அதாவது இன்று) அதிகாரிகளிடம் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×