search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    செஞ்சி அருகே சமணப்படுக்கை பாறையை வெடி வைத்து தகர்த்த 2 பேர் கைது

    செஞ்சி அருகே சமணப்படுக்கை பாறையை வெடி வைத்து தகர்த்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நெகனூர் பட்டி, தொண்டூர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணப்படுக்கைகள் மற்றும் பாறை ஓவியங்கள் உள்ளன. இந்த நிலையில் நெகனூர் பட்டியில் உள்ள சமணப்படுக்கை பாறைகள் மற்றும் பாறை ஓவியங்களை சிலர் வெடி வைத்து தகர்த்து, கல்லை கடத்தினர். இது தொடர்பாக அந்த பகுதி சமூக ஆர்வலர்கள், தொல்லியல் துறைக்கு புகார் அனுப்பினர்.

    இது தொடர்பாக தொல்லியல் துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    சமணப்படுக்கைகள் மற்றும் பாறை ஓவியங்கள் வெடி வைத்து தகர்ப்பதை தடுக்கவும், அதனை பாதுகாக்க நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இந்த 2 இடங்களையும் தொல்லியல் துறையின் வரலாற்று சின்னமாக அறிவிக்க தங்களது பரிந்துரையினை இத்துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக திண்டிவனம் சப்-கலெக்டர் அணு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று வெடி வைத்து தகர்க்கப்பட்ட சமணப்படுக்கை மற்றும் பாறை ஓவியங்களை பார்வையிட்டனர். அப்போது, கல்குவாரியில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த வெடி வைத்து, பாறைகள் தகர்க்கப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நெகனூர் பட்டியை சேர்ந்த சங்கர்(வயது 46), மேல்களவாயை சேர்ந்த கணேசன்(37) ஆகிய 2 பேரும் சமணப்படுக்கை பாறையை வெடி வைத்து தகர்த்து, பாறை கற்களை வீடு கட்டுவதற்காக எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பாறையை துளையிட பயன்படுத்திய எந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×