search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
    X
    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    ஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு : 20-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    ஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 20-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ள சூழலில் ஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 20-ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான வங்கி சேவைகளை அளிக்கவேண்டும். இதற்காக வங்கி ஊழியர்கள் 100 சதவீதம் அதாவது முழுமையாக பணிக்கு திரும்பவேண்டும். குறிப்பாக விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளும் பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு வங்கி நிர்வாகக்குழு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் வருகிற 20-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மாநகர், புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம்போல் வங்கிகள் செயல்பட்டால், தொற்று அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது.

    எனவே கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களை போல, வங்கிகளில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்கவேண்டும். ஊரடங்கின் போது, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையும், பணி நேரத்தை காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரையும் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அனைத்து வங்கி கிளைகளிலும் வார இறுதி நாட்களில், கிருமிநாசினி தெளிக்கவேண்டும். அரசு அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக இயக்கும் சிறப்பு பஸ் சேவையை போன்று வங்கி ஊழியர்களுக்கும் ஏற்படுத்தி தரவேண்டும். கொரோனா சோதனை மற்றும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் வங்கி ஊழியர்களுக்கு மருத்துவமனைகளில் முன்னுரிமை வழங்கவேண்டும்.

    கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்களை சுழற்சி முறையில் வங்கி பணிக்கு அனுமதிக்கவேண்டும். வங்கி சேவை அத்தியாவசிய பணி என்பதால், வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×