search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது

    விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனையை தடுத்து, இதற்கு காரணமானவர்களை கைது செய்ய மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தீவிர கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    இந்நிலையில் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரெயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, கிடைத்த தகவலின் பேரில் நகர இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 5 பேர் தப்பி ஓட முயன்றனர். உடன் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், நாப்பாளைய தெருவை சேர்ந்த சம்சுதீன் மகன் பயாஸ் அகமது (வயது 24), கீழ்பெரும்பாக்கம் செல்வநாதன் மகன் இமானுவேல் (25), தண்டபானி மகன் கார்த்திகேயன் (25), பக்கிரிசாமி மகன் கணேஷ் (28), வண்டிமேடு அண்ணாமலை மகன் கார்த்திக்ராஜா (28) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 1 கிலோ கஞ்சாவையும், விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்த பாலா மனைவி மகேஸ்வரி (37), குள்ளராஜா மனைவி அமுதா (30) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் ரகசியமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், விற்பனைக்கு போலீஸ் யாரேனும் துணைபோனால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ்சூப்பிரண்டு நல்லசிவம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×