search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் கண்ணன்
    X
    கலெக்டர் கண்ணன்

    மாவட்டத்தின் எந்த பகுதியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை - விருதுநகர் கலெக்டர் அறிவிப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு மாவட்டத்தின் எந்த பகுதியிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றால் 453 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027 ஆக உயர்ந்துள்ளது. தினசரி 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் நாள் தோறும் பரிசோதனை எண்ணிக்கைகளை 2500 ஆக அதிகரித்துள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் தெரிவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரியவேண்டிய நிலையில் உள்ளது.

    இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 57 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை அறிவித்தது .கடந்த வாரம் இதனை 107 ஆக உயர்த்தியதை தொடர்ந்து இந்த வாரம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 166 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் நடமாட்டம், வணிக நடைமுறைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்த வார இறுதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதன் பேரில் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் இதனை தெளிவுபடுத்தியபோதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் முழு ஊரடங்கு என்ற தகவல் அப்பகுதி மக்களிடையே பல்வேறு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கலெக்டர் கண்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனைகளை அதிகரித்துள்ளது. இதனால் இன்னும் அதிகபட்சமாக 10 நாட்களுக்கு நோய் பாதிப்பு அடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பாதிப்பு அடைந்தோரை சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையங்களில் அனுமதித்து கண்காணிக்கும் நிலையில் நோய் தொற்று கட்டுக்குள் வரும். மாவட்டத்தில் 166 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இதனை கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    இம்மாவட்டத்தில் நகர் பகுதிகளில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து வணிக நிறுவனங்களை மதியம் 3 மணிக்கே மூடுவதாக முடிவு செய்துள்ளனர். இது அவர்களாகவே எடுத்த முடிவாகும். மாவட்ட நிர்வாகம் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரில் காய்கறி மார்க்கெட்டில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வணிகர்கள் கடைகளை மதியமே மூடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவிக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாவட்டத்தில் எந்த பகுதியிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

    மாவட்ட மக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றுவதுடன் மருத்துவ பரிசோதனை செய்தவர்கள் முடிவு தெரிவிக்கப்படும் வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். மாவட்ட மக்கள் நிர்வாகம் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நோய் பரவல் விரைவில் கட்டுக்குள் வர வாய்ப்பு ஏற்படும். எனவே அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×