search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துவின் மகள்
    X
    முத்துவின் மகள்

    அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது - உயிரிழந்த விவசாயி முத்துவின் மகள்

    விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி முத்துவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது என அவரது மகள் தெரிவித்துள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி.   இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் 5 பேர் முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இதனை அறிந்ததும் அவரது மகன் நடராஜன் மற்றும் உறவினரும் சேர்ந்து சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.  சிவசைலம் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது எதிரே வனத்துறை அலுவலர்கள் ஜீப்பில் அணைக்கரை முத்துவை அழைத்து வந்தனர். அவரிடம் மகன் நடராஜன் விசாரித்தபோது உடல்நிலை சரியில்லை என்று கூறினாராம்.

    இதையடுத்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, அணைக்கரை முத்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.  உடனே அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை திரண்டு சென்று கடையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்து பூங்கோதை எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் வந்தனர்.

    இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதற்கிடையே சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு, இறந்த விவசாயியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

    இதற்கிடையில் இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும்  குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் உயிரிழந்த விவசாயி முத்துவின் மகள் செய்தியாளர்களிடம் பேசிய போது, தந்தையின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இது போன்ற மரணங்கள் இனி நிகழாத வகையில், தமிழக அரசு இதில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×