search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாடப்புத்தகங்கள் - கோப்புப்படம்
    X
    பாடப்புத்தகங்கள் - கோப்புப்படம்

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல்12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாடப்புத்தகங்களை வழங்கி வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளது.

    இதில் முதல்கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் ‘ஹைடெக் லேப்’ மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளதால் மாணவர்கள், பாடப்புத்தகங்களை பெற பள்ளிக்கு வரும்போது தங்களுடைய மடிக்கணினியையும் கொண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 படிக்க உள்ள 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் அந்தந்த பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

    இதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு சென்று வகுப்பு வாரியாக புத்தகங்களை பிரித்து அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், நாளை (இன்று) முதல் காலை 10 மணி முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. 1 மணி நேரத்தில் 20 மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவ- மாணவிகளுக்கு எந்தெந்த நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என்று அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு ஏற்கனவே குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வரும் மாணவ- மாணவிகளை சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக தனித்தனி அறைகளில் அமர வைத்து புத்தகங்கள் வழங்கப்படும்.

    அதே நேரத்தில் பள்ளிக்கு வரும்போது மாணவ- மாணவிகள் மடிக்கணினியை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதால் மாணவ- மாணவிகளின் மடிக்கணினியில் வீடியோ பாடங்களை பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×