search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    நெல்லை, தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலி

    நெல்லை, தூத்துக்குடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிகமான நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாவு எண்ணிக்கையும் மெதுவாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் இறந்துள்ளனர்.

    நெல்லை மாநகர போலீஸ் ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சாது சிதம்பரம் (வயது 55). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் நெல்லை சந்திப்பு தனியார் ஆஸ்பத்திரியில் சங்கர்நகர் நாராயண நகர் பகுதியை சேர்ந்த 87 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் நேற்று காலை இறந்தார். அம்பை அருகே உள்ள பள்ளகால் பொதுக்குடியை சேர்ந்த 64 வயது பெண் கொரோனா தொற்றால் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதவிர மேலப்பாளையத்தை சேர்ந்த 51 வயது முதியவரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மூச்சு திணறல், காய்ச்சல், இருமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று அவரும் பரிதாபமாக இறந்தார். அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629-ஆக உயர்ந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 12 பேர் ஏற்கனவே பரிதாபமாக இறந்து உள்ளனர்.

    இந்த நிலையில் காயல்பட்டினத்தை சேர்ந்த 58 வயது நிரம்பிய ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று காலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதே போன்று தூத்துக்குடியை சேர்ந்த 50 வயது பெண் கடந்த 9-ந் தேதி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×