search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவச உடை அணிந்த ஊழியர் சுத்தம் செய்ய எடுத்துச்சென்ற காட்சி.
    X
    கவச உடை அணிந்த ஊழியர் சுத்தம் செய்ய எடுத்துச்சென்ற காட்சி.

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஊழியருக்கு கொரோனா - கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைதளத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், போலீசார், உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம், கட்டுப்பாட்டு பகுதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தகவல் சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த சுகாதாரத்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவரின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அங்கு இவர் சென்று வந்ததாகவும் அதனால் தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று காலை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த அலுவலகம் மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை, அருகில் இருந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அறைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

    காலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில் தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் மருந்து வழங்கும் அறையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக மருந்து வழங்கும் பிரிவு வேறு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தஞ்சையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வங்கி கிளை நேற்று முதல் மூடப்பட்டது. இதனால் வங்கிக்கு வந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் மன்னார்குடியை சேர்ந்த 44 வயது போலீஸ்காரர் மற்றும் அவருடைய குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்பணி மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றி வரும் 25 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் நாடிமுத்து நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
    Next Story
    ×