search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தேனி மாவட்டத்தில், டாக்டர்கள், போலீஸ்காரர் உள்பட மேலும் 26 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 2 டாக்டர்கள், 2 போலீஸ்காரர் உள்பட மேலும் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அரசு டாக்டரின் மனைவி, 2 மகள்கள், தாய் ஆகிய 4 பேருக்கு நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டாக்டரின் மனைவியும் டாக்டர் ஆவார். அதேபோல், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    மேலும் தேனியில் பணியாற்றி வரும் உளவுத்துறை போலீஸ்காரர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு பழனிசெட்டிபட்டி அரசு நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தேனி அல்லிநகரம் தூய்மை பணியாளர் குடியிருப்பில் வசித்து வரும் தூய்மை பணியாளரின் மனைவிக்கு நேற்று முன்தினம் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நேற்று தூய்மை பணியாளருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கம்பம் வரதராஜபுரத்திற்கு பெங்களூருவில் இருந்து வந்த கணவன்-மனைவிக்கு தேவதானப்பட்டி சோதனை சாவடியில் பரிசோதனை செய்த போது, 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.

    இதேபோல் பண்ணைப்புரம் பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர், ராயப்பன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றும் கம்பம் டி.டி.குளத்தை சேர்ந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேனி அருகே பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து பெற்றோருடன் வந்த 3 சிறுமிகள், கம்பத்தை சேர்ந்த 57 வயது மருந்துக்கடை உரிமையாளர் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பெரியகுளம் பகுதியில் 34 வயது பெண் உள்பட 4 பேருக்கும், போடியில் 52 வயது பெண் உள்பட 4 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேபோன்று, சின்னமனூரை சேர்ந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகருக்கும், உத்தமபாளையம் கிளை சிறையில் கைதி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, போடி, பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 242 ஆக உயர்ந்துள்ளது
    Next Story
    ×