search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி

    பொய்யான தகவல் மூலம் இ-பாஸ் பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

    தூத்துக்குடி மாவட்டத்தில் பொய்யான தகவல் மூலம் இ-பாஸ் பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவலாக மாறாமல் இருக்க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று, ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்துக்கு பயணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அனுமதி அளிக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கும் இ-பாஸ் மூலம் ஒரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்துக்கு செல்ல உரிய ஆவணங்கள் மற்றும் சரியான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் பயணம் செய்ய இ-பாஸ் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாவட்ட எல்லை பகுதியில் 15 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வருவாய் துறை, காவல் துறை, சுகாதார துறை அலுவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சோதனைச்சாவடியில் இ-பாசில் உள்ள கியு.ஆர். கோடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு முறையாக அனுமதி பெற்றுள்ளாரா? எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ராஜீவ்நகரை சேர்ந்த ஆசிரியர் அமல்ராஜ்(வயது 49). இவர் தனக்கு சொந்தமான காரில் மருத்துவ காரணங்களுக்காக சென்னை செல்ல அருள் வசந்தி பெயரில் இ-பாஸ் பெற்று, வேறு நபர்கள் 3 பேரை அழைத்து கொண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று உள்ளார். பின்னர் சென்னையை சேர்ந்த அமுதாசெல்வி என்பவர் பெயரில் மருத்துவ காரணங்களுக்காக இ-பாஸ் பெற்று 2 பேரை கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடைக்கு அழைத்து வந்து உள்ளார். இவர் பொய்யான ஆவணங்களை பயன்படுத்தி இ-பாஸ் பெற்று உள்ளார் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர் நோய் தொற்றை பரப்பும் விதமாக சென்னை சென்று வந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை.

    இதைத்தொடர்ந்து அவர் மீது கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அமல்ராஜ் தற்போது கோவில்பட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் பரிசோதனைக்காக போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது போன்று பொய்யான தகவல்களை பயன்படுத்தி இ-பாஸ் பெற்று தூத்துக்குடி மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்துக்கு சென்று வருபவர் மீது தொற்று நோய் பரவல் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொய்யான தகவல் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி இ-பாஸ் பெற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×