search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசி
    X
    காசி

    காசியை காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் மனு

    பாலியல் விவகாரத்தில் சிக்கிய நாகர்கோவில் காசியை 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

    அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் போலீஸ் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் பல பெண்களை ஏமாற்றியதால் காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும், காசிக்கு உறுதுணையாக அவருடைய நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர். அதையடுத்து அவர்களில் ஒருவரான டேசன் ஜினோ என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்றும், எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதைத்தொடர்ந்து காசி மீதான 6 வழக்குகளின் விசாரணை ஆவணங்களும் நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, காசி வழக்கு விசாரணையை புதிய கோணத்தில் தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் சிறையில் உள்ள காசியையும், அவருடைய நண்பர் டேசன் ஜினோவை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சிறையில் உள்ள காசியையும், அவருடைய கூட்டாளியையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதில் 10 நாள் போலீஸ் காவல் வழங்க கேட்டுள்ளோம். கோர்ட்டு இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கவில்லை. கோர்ட்டு உத்தரவிட்டபிறகு காசியையும், அவருடைய நண்பரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம் என்றார்.
    Next Story
    ×