search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நோய் தொற்று
    X
    கொரோனா நோய் தொற்று

    ராமநாதபுரத்தில் டாக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா - ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு

    ராமநாதபுரத்தில் டாக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த டாக்டர் நடத்தி வந்த ஆஸ்பத்திரிக்கு சீல் வைக்கப்பட்டது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86-ஆக இருந்தது. இந்த நிலையில் திருப்புல்லாணி அருகே உள்ள மேலூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள் என 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    இவர்களை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் நோய்த்தடுப்பு
    நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதோடு அவர்களோடு தொடர்புடையவர்களுக்கு பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல ராமநாதபுரத்தில் ஆஸ்பத்திரி நடத்தி வரும் இருதயநோய் சிகிச்சை டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மதுரையில் தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்  சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள அவரது ஆஸ்பத்திரியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் விடுவிக்கப்பட்டு, அங்கு பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த தனியார் ஆஸ்பத்திரி பூட்டி சீல்வைக்கப்பட்டு அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி
    வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×