search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சமோசா விற்பனை செய்ய சைக்கிளில் செல்லும் சிறுவனை படத்தில் காணலாம்.
    X
    சமோசா விற்பனை செய்ய சைக்கிளில் செல்லும் சிறுவனை படத்தில் காணலாம்.

    குடும்ப வறுமையை போக்க தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று சமோசா விற்கும் சிறுவன்

    ஊரடங்கால், குடும்ப வறுமையை போக்க தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று சிறுவன் ஒருவன் சமோசா விற்று வருகிறான்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி உப்பரிகை மண்டப பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகள், 6-ம் வகுப்பு படிக்கும் மற்றும் 4-ம் வகுப்பு படிக்கும் மகன்கள் உள்ளனர். கொத்தனார் வேலைக்கு சென்று வரதராஜன் ஈட்டி வரும் வருமானத்தை வைத்தே இந்த குடும்பம் நடந்து வந்தது. குடும்பத்தில் உள்ள பிள்ளைகளும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திடீரென நரம்பு தளர்ச்சி நோயால் வரதராஜன் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. குடும்ப தலைவரின் வருமானம் நின்று போனதால் இந்த குடும்பமே ஆடிப்போனது. வருமானம் இல்லாததால் இந்த குடும்பமே அல்லாடியது. சுமதிக்கு ஏற்கனவே கைத்தறி நெசவு தொழில் தெரியும் என்பதால் வீட்டிலேயே நூற்கண்டு தயாரித்து சொற்ப வருமானத்தை ஈட்டினார். இப்படியே நகர்ந்த இவர்களது வாழ்வு ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகுந்த சிரமத்திற்கு ஆளானது.

    தினமும் வந்து கொண்டிருந்த சொற்ப வருமானத்திற்கும் கொரோனா ஆப்பு வைத்ததால் என்ன செய்வது என தெரியாமல் சுமதி தவித்துப்போனார். தங்கள் குடும்ப சூழ்நிலையை அறிந்த சுமதியின் 6-ம் வகுப்பு படிக்கும் மகன் விஷ்ணு தனது தாயிடம், ஏம்மா கவலைப்படுறே. இந்த குடும்பத்தின் வருமானத்திற்காக நான் ஏதாவது வேலைக்கு செல்கிறேன் என்று கூறி உள்ளான். குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து மகன் கூறியதைக்கேட்ட சுமதி தனது மகனை வாரி அணைத்துக்கொண்டார்.

    இதனையடுத்து வீட்டிலேயே வடை, போண்டா, சமோசா போன்ற உணவு பண்டங்களை தயாரித்து தருகிறேன். அதை விற்று வா என்று மகனிடம் கூறிய சுமதி தினமும் இவைகளை தயாரித்து அந்த உணவு பண்டங்களை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து மகனிடம் வழங்குவார். அவன் அந்த பெட்டியை தனது சைக்கிளின் பின்னால் வைத்து கொண்டு அந்த சைக்கிளில் வீதி, வீதியாக சென்று விற்பனை செய்து வருகிறான்.

    இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு இந்த குடும்பம் தற்போதைய சூழலில் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு 10 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் சென்று உணவு பண்டங்களை விற்பனை செய்து வரும் விஷ்ணு, தினமும் காலையில் 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு செல்வான். எல்லாவற்றையும் விற்றுவிட்டு வீடு திரும்புவதற்கு மதியத்திற்கு மேல் ஆகி விடுகிறது. தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் பல்வேறு இடங்களுக்கு சைக்கிளில் சென்று வருவதால் கால்வலி ஏற்படுவதையும் பொருட்படுத்தாமல், வறுமையில் வாடும் தனது குடும்பத்திற்காக சிறுவயதிலேயே கஷ்டப்பட்டு உழைத்து வருகிறான்.

    இது குறித்து விஷ்ணுவிடம் கேட்டபோது, குடும்பத்திற்காக உழைக்கும்போது தனக்கு கால்வலி பெரிதாக தெரியவில்லை என்றான். பள்ளிக்கூடம் திறக்கும் வரை இந்த வேலையை பார்ப்பேன். பின்னர் பள்ளிக்கூடத்திற்கு செல்வேன். அதற்குள் ஊரடங்கு முடிந்து அம்மாவுக்கு வேலையும் கிடைக்கும் என்றான். குடும்பத்தின் வறுமையை போக்க உழைக்கும் இந்த சிறுவனைப்போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருந்தால் வறுமை என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் இல்லாமல் போகும் என்பது மட்டும் நிச்சயம். 
    Next Story
    ×