search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உணவு பொட்டலம் (கோப்புப்படம்)
    X
    உணவு பொட்டலம் (கோப்புப்படம்)

    சென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்

    சென்னையில் கடந்த 60 நாட்களில் 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர், உணவு தேவை என்போருக்கு உதவவும் தொலைபேசி எண்ணை தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    கொரோனா பாதிப்பு பலரை பரிதவிக்க வைத்தாலும் பலரிடம்  பிறருக்கு உதவும் மனப்பக்குவத்தை வளர்த்து இருக்கிறது.

    ஊரடங்கால் முடங்கிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்தவர்களுக்கு எத்தனையோ பேர் தங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்தனர். அவர்களுடைய மனித நேயமிக்க செயல் பாராட்டுக்குரியது.

    சென்னையில் ஒரு 3 நட்சத்திர ஓட்டல் அதிபர் கடந்த 2 மாதங்களாக அந்த ஓட்டலில் தினமும் 400 பேருக்கு இலவச உணவு பொட்டலங்களை விநியோகித்து வருகிறார்.

    எழும்பூர் பூந்தமல்லி சாலையைச் சேர்ந்தவர் பிரவீண். இவருக்கு சொந்தமான “துவாரகா” என்ற 3 நட்சத்திர ஓட்டல் கதீட்ரல் ரோட்டில் உள்ளது.

    இந்த ஓட்டலில் 40 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் ஓட்டல் மூடப்பட்டது. ஆனால் தனது பணியாளர்களுக்கும் உதவ வேண்டும், பொதுமக்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த ஓட்டலை தினமும் இலவச உணவு வழங்கும் உணவு கூடமாக மாற்றி விட்டார்.

    தினமும் சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், புளியோதரை ஏதாவது ஒரு உணவை சமைத்து 400 பொட்டலங்கள் தயார் செய்வார்கள்.

    மதியம் அந்த ஓட்டலுக்கு சென்று இலவசமாக உணவு பொட்டலங்களை பெற்று செல்லலாம். ஒரு நபர் தனது குடும்ப தேவைகளுக்காக 5 பொட்டலங்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.

    தொடக்கத்தில் தினமும் 800 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு 400 முதல் 500 பேருக்கு வழங்கப்பட்டது. தற்போது தினமும் 150 பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. கடந்த 60 நாட்களில் 24 ஆயிரம் பேரின் பசியை போக்கி உள்ளார் பிரவீண்.

    மேலும் அதிகளவில் உணவு தேவைப்பட்டால் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தேவையான அளவு உணவை கொடுத்து உதவுகிறார்.

    இதற்கான போன் நம்பரையும் (98414 10000) அவர் வெளியிட்டுள்ளார்.

    இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “இது என்னால் முடிந்த சிறு உதவிதான். ஓட்டல் மூலம் எவ்வளவோ சம்பாதித்து வருகிறேன். இப்போது கஷ்டப்படும் மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன்.

    இது மட்டுமல்லாமல் ரத்த தானத்திற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்கி உள்ளேன். (எம்.பிளட்) என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு ரத்தம் தேவைப்படுபவர்கள் அதில் தொடர்பு கொண்டால் போதும் அந்த பகுதியில் ரத்த தானம் செய்பவர்கள் நேரிடையாக வந்து தானம் செய்து விட்டு செல்வார்கள்.

    இதில் ஆயிரக்கணக்கான பேர் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளார்கள் என்றார்.
    Next Story
    ×