search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் வீரராகவராவ்
    X
    கலெக்டர் வீரராகவராவ்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,799 பேருக்கு கொரோனா பரிசோதனை - கலெக்டர் வீரராகவராவ் தகவல்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,799 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, எமனேசுவரம் மற்றும் வைசியர் வீதி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    கொரோனா பரிசோதனை  - கோப்புப்படம்

    மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,799 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 30 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது எனவும், 3,564 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 205 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் மூலமாகவும், சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்பின் காரணமாகவும் இதுவரை 15 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 14 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 5 நபர்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும், 3 நபர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும், 6 நபர்கள் சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 15 உள்ளாட்சி பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி சுமார் 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் மொத்தம் 19 கட்டுப்பாட்டு பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விதிமீறல் தொடர்பாக இதுவரை 3,633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 5,648 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத 445 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளபடி, பிற மாநிலங்களில் பணிகளுக்குச் சென்று சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியில் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேலு, காவல்துணை கண்காணிப்பாளர் சங்கர், பரமக்குடி நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் உட்பட அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

    Next Story
    ×