search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உதயகுமார்
    X
    அமைச்சர் உதயகுமார்

    குடிநீர் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார் உத்தரவு

    குடிநீர் வடிகால் வாரியத்துறையுடன் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட்டு தினந்தோறும் குடிநீர் வழங்கிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடையின்றி கிடைக்கும் பொருட்டு பணிகளின் செயலாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே குடிநீர் சம்பந்தமாக நடைபெறும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி முடிக்க வேண்டும். அலுவலர்களை நியமனம் செய்து நாள் தோறும் குடிநீர் விநியோகம் தடையின்றி கிடைக்க கண்காணித்திட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் முறையற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறிந்து துண்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொது மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ஆழ்துளை கிணறுஅமைத்திடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

    மாவட்டத்தில் அனைத்து பகுதிகளையும் கணக்கெடுத்து நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்துறையுடன் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட்டு தினந்தோறும் குடிநீர் வழங்கிட பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி பகுதிகளிலும் தினந்தோறும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    குழாய் உடைப்பினால் நீர் வீணாகி செல்வது உள்ளிட்ட குறைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அமைச்சர் கூறினார்.

    இந்த ஆய்வில் போது கலெக்டர் வினய், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன், ப்ரியங்கா பங்கஜம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×