search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக போலீஸ்
    X
    தமிழக போலீஸ்

    ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள்- பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்

    தினமும் மார்க்கெட்டிற்கு வராதீர்கள் என்றும் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

    மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியில் காய்கறிகள் வாங்க வசதியாக 1 மீட்டர் இடைவெளியில் வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    மார்க்கெட்டில் போலீசார் காலை முதலே கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மார்க்கெட்டிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வதால் தினமும் காலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இன்றும் காய்கறிகள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    இதனால் போலீசார் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலமாக பல்வேறு வேண்டுகோள்களை விடுத்தனர். கூட்டம், கூட்டமாக கடைகளில் நிற்காதீர்கள். மார்க்கெட்டிற்கு தினமும் வருவதை தவிர்க்கும் வகையில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்லுங்கள்.

    கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கு நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இதற்கிடையில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காய்கறிகளை நன்கு தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். கர்பபிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் கண்டிப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். கொரோனா நோய் தொற்று அறிகுறி தென்படுபவர்கள் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறை எண்.1077 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×