search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் 20 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்த நிலையில் மேலும் 20 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலை வரை 11 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் 7 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், 4 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த ஒரு பெண், அவரது கணவர், மாமியார் மற்றும் பேட்மாநகரத்தை சேர்ந்த 2 பேர், ஆத்தூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது. ஏற்கனவே கொரோனா பாதித்த நபர்களின் வீடு உள்ள பகுதி முழுவதும் சுகாதார துறையினரின் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் நேற்று கொரோனா தொற்று உறுதியான 6 பேரின் வீடு உள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    நேற்று கொரோனா பாதித்த 6 பேரில் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் என்பதால், அவருடன் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த மற்றவர்களுக்கு கொரோனா பாதித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

    இதையடுத்து அந்த பெண்ணுடன் பணிபுரிந்த மருத்துவமனை ஊழியர்கள் 9 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

    மேலும் அந்த பெண் பணிபுரிந்த மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தனியார் மருத்துவமனை டாக்டர் அவரது வீட்டிலும், மருத்துவமனை ஊழியர்கள் 9 பேர் தூத்துக்குடி ஆஸ்பத்திரியிலும் தனிமைப் படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இன்று மாலைக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதியானால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இன்று காலை நிலவரப்படி 13 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று அறிகுறியுடன் 20 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×