search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உணவு சேமிப்பு கிடங்கில் ரேஷன் பொருட்கள் லாரியிலிருந்து இறக்கப்பட்ட காட்சி.
    X
    உணவு சேமிப்பு கிடங்கில் ரேஷன் பொருட்கள் லாரியிலிருந்து இறக்கப்பட்ட காட்சி.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்க ரேஷன் பொருட்கள் லாரிகளில் வந்தன

    கரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்க ரேஷன் பொருட்கள் லாரிகளில் வந்தன. அவைகள் உணவு கிடங்கில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் மொத்தம் 588 ரேஷன் கடைகள் உள்ளன. சுமார் 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அடுத்த மாதத்திற்கான (ஏப்ரல்) அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவுத்துறை சார்பில் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ.) சார்பில் லாரிகளில் சென்னை, கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய கிடங்குகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அத்தியாவசியப்பொருட்கள் நேற்று கரூர் சணப்பிரட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சேமிப்பு கிடங்கிற்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல மண்மங்கலம், தென்னிலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, காணியாளம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள உணவு பொருள் சேமிப்பு கிடங்குகளிலும் ரேஷன் பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த மாதத்திற்குரிய (மார்ச்) ரேஷன் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 80 சதவீதம் வினியோகிக்கப்பட்டு விட்டன. அரசு அறிவுறுத்தலின்பேரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாயுடன், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா தெரிவித்தார்.

    144 தடை உத்தரவை மீறி தேவையற்ற காரணங்களுக்காக யாரும் வீதிக்கு வருகின்றனரா? என போலீசார் கரூர் மனோகரா கார்னர், சுங்ககேட், வெங்கமேடு, சர்ச்கார்னர் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளில் இருந்து டீ, காபி, தின்பண்டங்கள் போன்றவற்றை அவ்வப்போது கொடுத்து உதவி வருகின்றனர். இதேபோல் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் உணவின்றி சாலையோரமாக இருந்த சிலருக்கு இணைந்த கைகள் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் உணவு வழங்கினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ரோந்து சென்று பாதுகாப்பு பணியை பார்வையிட்டார். 
    Next Story
    ×