search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் காதை அறுத்து நகை கொள்ளை

    வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நாவல்குளம் கண்ணகி வீதியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 71). இவரது மகன் சுரேஷ் (வயது 49).

    சுரேஷ் மனைவி மஞ்சுமாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    சுரேஷ் புதுவையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதுபோல் மஞ்சுமாதேவி அங்குள்ள தையல் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

    நேற்று காலை சுரேசும் அவரது மனைவி மஞ்சுமாதேவியும் வேலைக்கு சென்றுவிட்டனர். குழந்தைகள் 2 பேரும் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் டியூசன் சென்றனர். வீட்டில் கல்யாணி மட்டும் தனியாக இருந்தார்.

    இரவு 8.30 மணி அளவில் கல்யாணி வீட்டுக்கு 2 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியிருந்தனர். பின்பு வீட்டுக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த கல்யாணியை தாக்கி கீழே தள்ளினர். அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினர். இதில் கல்யாணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    அப்போது ஒரு கொள்ளையன் கல்யாணியின் காதில் கிடந்த ஒரு கம்மலை கழற்றினான். மற்றொரு காதில் கிடந்த கம்மலையும் கழற்ற முயன்றான். கம்மலை கழற்றமுடியாததால் கத்தியால் கம்மலுடன் காதை அறுத்தான். இதில் கல்யாணியின் காதில் இருந்து ரத்தம் கொட்டியது.

    பின்பு 2 கொள்ளையர்களும் ஒரு பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இரவு 9 மணி அளவில் வேலைக்கு சென்றிருந்த சுரேசும், அவரது மனைவி மஞ்சுமா தேவியும், டியூசன் சென்றிருந்த 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர்.

    அங்கு கல்யாணி ரத்தகாயங்களுடன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொள்ளையர்கள் வீடு புகுந்து கல்யாணியை தாக்கி காதில் கிடந்த கம்மலை அறுத்து கொண்டு சென்றது தெரியவந்தது.

    உடனடியாக அவர்கள் மயங்கி கிடந்த கல்யாணியை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த கொள்ளை குறித்து ஆரோவில் போலீசில் சுரேஷ் புகார் செய்தார். உடனடியாக கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பெண்ணை தாக்கி நகை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்கள் புதுவையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×