search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முஜிபூர்
    X
    முஜிபூர்

    செஞ்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
    செஞ்சி:

    சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் 78 நாடுகளுக்கும் பரவி உள்ளது. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,981 பேர் உயிர் இழந்துள்ளனர்.

    எனவே இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் மட்டும் வீடுகளில் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை மருத்துவ குழுவினர் தினமும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

    செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப்கோகன். இவரது மகன் முஜிபூர் (வயது 22). சென்னை வேளச்சேரியில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு சிலநாட்களாக காய்ச்சலால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே செஞ்சியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் தீரவில்லை. அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முஜிபூர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு இறந்தார்.

    ஆனால் முஜிபூர் கொரோனோ வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகி விட்டதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதனை அறிந்த முஜிபூரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறுகையில், முஜிபூரின் ரத்தமாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பபட்டு உள்ளது. பரிசோதனை முடிவில்தான் அவர் கொரோனோ வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளாரா? என்பது தெரியவரும். அதன் பின்னர் முஜிபூரின் உடல் உறவினர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    கடந்த 28-ந்தேதி செஞ்சி மீனம்பூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் முஜிபூர் உடல் நலக்குறைவால் புதுவை மாநிலம் மதகடிபட்டு பகுதியில் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அங்கிருந்து தகவல் வந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் நேற்று இறந்து விட்டதாகவும் தகவல் கிடைத்தது.

    உடனே அவரது ரத்த மாதிரி சேகரிப்பட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரிசோதனை நடந்தது. மீண்டும் பரிசோதனைக்கு சென்னையில் கிங்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கிருந்து அறிக்கை வந்த பின்னர்தான் முஜிபூர் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்? என்பது தெரியவரும்.

    மேலும் என்ஜினீயர் முஜிபூர் சென்னை தேனாம்பேட்டையில் தங்கி சைதாப்பேட்டையில் வேலை பார்த்து உள்ளார். எனவே மருத்துவ குழுவினர் அங்கு சென்றும் கள ஆய்வு நடத்தி உள்ளனர். முஜிபூர் யார்- யாரிடம் பழகினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×