search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரட்
    X
    கேரட்

    டெல்லியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினசரி 30 டன் கேரட் இறக்குமதி

    கேரட் தட்டுப்பாட்டை போக்க வியாபாரிகள் டெல்லியிலிருந்து கேரட்டை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர். நாளொன்றுக்கு 25 டன்னிலிருந்து 30 டன் வரை கேரட் இறக்குமதி செய்யப்படுகிறது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தின் விவசாய விளைபொருட்களின் முக்கிய வியாபார கேந்திரமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட் விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகளுக்கு தினசரி முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, ஆகிய இங்கிலீஷ் காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன.

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளாவுக்கு காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்ற காய்கறிகளை விட மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட்டுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது கேரட் ஒரு கிலோ ரூபாய் 50-ல் இருந்து ரூபாய் 80 வரை விற்பனையாகி வந்தது. மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளை விட எப்போதும் கேரட்டுக்கு அதிக விலை கிடைத்து வந்தது.

    கேரட்டில் அதிக லாபம் கிடைத்ததால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்ற பயிர்கள் பயிர் செய்வதை விட கேரட் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். கடந்த ஆண்டு நீலகிரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக விளைநிலங்கள் நீரில் மூழ்கி மலைக்காய்கறிகளின் உற்பத்தி வெகுவாக குறைந்து காணப்பட்டது.

    இதனால் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கேரட் வரத்து குறைந்து காணப்பட்டது. வரத்து குறைந்ததால் விலையும் அதிகரித்தது. இவ்வாறு வரத்து குறைவான காலங்களில் கர்நாடகா மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இருந்து கேரட் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்வதின்மூலம் கேரட் தட்டுப்பாடு ஓரளவு குறைக்கப்பட்டு வந்தது.

    ஆனால் இந்த முறை கேரட் தட்டுப்பாட்டை போக்கவும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கேரட்டை விற்பனை செய்யவும் முதன்முறையாக வியாபாரிகள் ஒரு சிலர் மேட்டுபாளையம் மார்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு கடந்த 15 தினங்களாக டெல்லியிலிருந்து கேரட்டை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர். நாளொன்றுக்கு 25 டன்னிலிருந்து 30 டன் வரை கேரட் இறக்குமதி செய்யப்படுகிறது.

    டெல்லியிலிருந்து கேரட் பாரம் ஏற்றிய கண்டெய்னர் லாரி சுமார் 80 மணி நேர பயணத்திற்கு பின்னர் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டை வந்தடைகின்றது.

    இதன் அளவு நிறம் அனைத்தும் ஊட்டி கேரட்டைப் போலவே தோற்றமளிக்கிறது. ஆயினும் ஊட்டி கேரட்டைவிட சுவை சற்று குறைந்து காணப்படுகிறது.

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளுக்கு ஊட்டி கேரட்டுக்கு பதிலாக டெல்லி கேரட்டை இறக்குமதி செய்வதன் மூலம் கேரட் தட்டுப்பாடு ஓரளவு நீங்கி கேரட் விலையும் குறைந்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×