search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய மாணவர் படையினருக்கான செயல்முறை தேர்வில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்திய காட்சி.
    X
    தேசிய மாணவர் படையினருக்கான செயல்முறை தேர்வில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்திய காட்சி.

    தேசிய மாணவர் படையினருக்கு செயல்முறை தேர்வு - திருச்சியில் நடந்தது

    தேசிய மாணவர் படையினருக்கு செயல்முறை தேர்வு திருச்சியில் நடந்தது.
    திருச்சி:

    பள்ளி, கல்லூரிகளில் தேசிய மாணவர் படை பிரிவு உள்ளது. இந்த பிரிவில் மாணவர்கள் பலர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பிரிவில் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கி சான்றிதழ் வழங்கப்படும். இதில் திருச்சி மாவட்டத்தில் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு படிக்கும் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கான தேர்வு தேசிய கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் திருச்சியில் நேற்று 2-வது நாளில் செயல்முறை தேர்வு நடந்தது. இதில் மாணவ-மாணவிகளின் தனித்திறமை, அணிவகுப்பு, துப்பாக்கியை தூக்கிப்பிடித்து மரியாதை செலுத்தும் முறை, துப்பாக்கிகளின் உதிரிபாகங்களை பிரித்து அதனை உடனடியாக சேர்த்தல், யுத்த களத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தல், துல்லிய தாக்குதல் நடத்துவதற்கு பயணித்தல், வரைபடத்தை பார்த்து கண்டறியும் திறன் உள்ளிட்டவை நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் 1,100 பேர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற பயிற்சியின் திறமையை தேர்வில் வெளிப்படுத்தினர்.

    இந்த தேர்வை திருச்சி கமாண்டிங் அதிகாரி கர்னல் ஆர்.பி.சபு நேரடி கண்காணிப்பில் நடத்தினார். ராணுவ வீரர்களும் உடன் இருந்தனர். இந்த தேர்வு குறித்து கர்னல் சபு கூறுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேசிய மாணவர் படை உள்ளது. இதில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வில் 350 மதிப்பெண்களுக்கும், செயல்முறை தேர்வில் 150 மதிப்பெண்களும் என மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 250 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சிக்கு தகுதியாவார்கள். இதற்கு வழங்கப்படும் சான்றிதழ் உயர் கல்வி பயிலவும், ராணுவ பணியில் சேரவும் பெரும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.
    Next Story
    ×