search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் பார்க்டவுன் இந்தியன் வங்கி மூடிக்கிடக்கும் காட்சி
    X
    2-வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் பார்க்டவுன் இந்தியன் வங்கி மூடிக்கிடக்கும் காட்சி

    வங்கி ஸ்டிரைக் 2-வது நாளாக நீடிப்பு - ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி

    புதிய ஊதிய ஒப்பந்தம் போட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ஏ.டி.எம். மிஷினில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    சென்னை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தொடங்கிய ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

    10 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். 80 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டன. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முக்கிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    தமிழகத்திலும் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. ஒரு சில வங்கிகள் திறந்து இருந்த போதிலும் ஊழியர்கள் இல்லாததால் சேவை நடைபெறவில்லை. வங்கியில் பணம் போடவோ, எடுக்கவோ முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். ஏ.டி.எம். மையங்களில் நிரப்பி வைத்திருந்த பணமும் தீர்ந்துவிட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். சென்னையில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டன.

    இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் வேலை றிறுத்தம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது. இன்று மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வழக்கமாக வங்கிகள் முழுமையாக செயல்பட வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் இன்று மூடப்பட்டு இருந்தன.

    மேலும் நாளை (ஞாற்றுக்கிழமை) வழக்கமான விடு முறையாகும். 3 நாட்கள் வங்கி பணிகள் முடக்கப்படுவதால் வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகள் அந்நிய செலாவனி பரிமாற்றம் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

    காசோலை பரிமாற்றம் செய்யாமல் தேக்கம் அடைந்துள்ளன. தென்னிந்தியா விற்கான சென்னை காசோலை பரிமாற்ற மையத்தில் 2 நாட்களில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள 18 லட்சம் காசோலைகள் தேங்கி உள்ளன.

    மாதத்தின் கடைசி நாட்களில் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் தனியார் நிறுவனங்கள், சிறுதொழில் செய்வோர் சம்பளம் கொடுக்க முடியாமல் திணறினார்கள். தொழில் நிறுவனங்களின் காசோலைகள் பரிமாற்றம் ஆகாமல் 3 நாட்கள் தேங்கி நிற்க கூடிய வாய்ப்பு இருப்பதால் வர்த்தகம் மற்றும் பெரிய வியாபாரங்கள் பாதிக்கக்கூடும்.

    சென்னையில் ஒரு சில தனியார் வங்கிகள் தவிர அனைத்து வங்கிகளும் மூடப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏடி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழந்து காணப்படுகின்றன. நேற்றே பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை.

    புதிய தனியார் வங்கி ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகின்றன. இதனால் அங்கு நீண்ட வரிசை காணப்படுகிறது. மாத சம்பளம் பெறக்கூடியவர்கள், பென்சனர்கள் கூட வங்கிகளில் சென்று பணம் பெற முடியாமல் கஷ்டப்பட்டனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 29, 30-ந்தேதிகளில் பென்சன் கணக்குகளில் போடப்பட்டு விடும். ஆனால் கணக்கில் வந்த பணத்தை எடுக்க முடியாமல் ஓய்வூதிய தாரர்கள் அவதிப்பட்டனர்.

    வங்கிகள் 3 நாட்கள் தொடர்ந்து மூடப்பட்டதால் சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவசர தேவைக்கு ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க முடியாத நிலையில், நீண்ட நேரம் காத்து கிடக்கக்கூடிய சூழலும் உருவாகி உள்ளது.
    Next Story
    ×