search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    அயனாவரம் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்- கோர்ட்டு தீர்ப்பு

    அயனாவரம் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    போலீஸ் விசாரணையில் சிறுமி தொடர்ந்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.

    இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன் கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

     

    புழல் சிறை

    17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி ஐகோர்ட்டு ரத்து செய்தது. எனினும் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மிகவும் நுட்பமான இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நியமிக்கப்பட்டு, சிறப்பு கோர்ட்டு நீதிபதி மஞ்சுளா முன்பு வழக்கு விசாரணை நடந்தது. கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 11 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார். மீத முள்ள 16 பேருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதையொட்டி 16 பேரும் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். சிறிது நேரத்தில் நீதிபதி மஞ்சுளா தீர்ப்பை வாசித்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் விடுவிக்கப்பட்டார். மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறினார்.

    Next Story
    ×