search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊராட்சிமன்ற வளாகத்தில் தலைவர் சக்திவேல் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்த காட்சி.
    X
    ஊராட்சிமன்ற வளாகத்தில் தலைவர் சக்திவேல் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்த காட்சி.

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மாயனூர் ஊராட்சியில் நேற்று குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் கற்கவள்ளி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், கிராமங்களின் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் சுகாதாரமான முறையில் பாதுகாத்திட வேண்டும். திறந்தவெளியில் மலம்் கழிக்காமல், அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறைகளை கட்ட முன்வரவேண்டும்.

    தமிழக அரசால் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. அத்தடையின் செயல்பாட்டை கண்காணிப்பது குறித்தும் நெகிழி மாற்றுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவற்றின் பயன்பாட்டை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பிரதான் மந்தி்ரி சுரக்‌ஷா பீமாயோஜனா காப்பீடு திட்டம் பயன் குறித்து மக்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். என்றார். இதில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சந்திரமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாந்தோன்றி ஒன்றியம், பாகநத்தம் ஊராட்சி, நொச்சிபட்டி மாரியம்மன் கோவில் முன்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியின் முழு சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், நூறு சதவீதம் கழிப்பறை பயன்பாட்டை உறுதி செய்தல், ஊராட்சியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், கோடை காலத்தில் அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் தங்கமணி வாசித்தார். கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய உதவியாளர் ருக்மணி, கிராம சுகாதார செவிலியர் சர்மிளா, கூட்டுறத்துறை பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    பார்வையாளர் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் கல்பனா கலந்து கொண்டார். கூட்டத்தில் பொது நிதி செலவினம், மழைநீர் சேகரிப்பு, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரியின் ஜல்சக்தி திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை செயலாளர் லெட்சுமணன் செய்திருந்தார். இதேபோல் சிந்தலவாடி, பிள்ளபாளையம், கருப்பத்தூர், பஞ்சப்பட்டி, பாப்பக்காப்பட்டி, கம்மநல்லூர், மகாதானபுரம் உள்பட 13 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றதலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    காதப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சிமன்ற தலைவர் கிருபாவதி தலைமையிலும், மண்மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயம்மாள் தலைமையிலும், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் லதா சுப்பரமணியம் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. 
    Next Story
    ×