search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெற்பயிர்கள்
    X
    நெற்பயிர்கள்

    நெல் அறுவடை பணிக்கு கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை - விவசாயிகள் திண்டாட்டம்

    டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பணிக்கு கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
    திருவாரூர்:

    காவிரி டெல்டாவில் சம்பா நெல் சாகுபடி வயல்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. முன் கூட்டியே பயிர் செய்த இடங்களில் அறுவடையும் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு சீரான மழை, மேட்டூர் அணையில் இருந்து தேவைக்கேற்ற வகையில் திறந்து விடப்பட்ட நீர் மேலாண்மை, பெரும்பாலான குளம் மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டதால் பாதுகாக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்ட காரணிகளால் விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

    திருப்திகரமான மகசூலை தரும் என்ற வகையில் நெற்பயிர்களும் விளைச்சல் காட்டியுள்ளது. இந்த நிலையில் அறுவடைப் பணிகளை மேற்கொள்ள விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவில் இல்லை. கடந்த காலங்களில் சீரற்ற காலநிலையாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் விவசாய பரப்பு குறைந்தது. விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.

    வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானதால் மாற்றுத் தொழிலை தேடி திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு சென்று விட்டனர். மீதமுள்ளவர்களும் அருகில் உள்ள சிறு நகரங்களுக்கு குறைந்த ஊதியத்தில் வேலைக்கு சென்று விட்டனர். அங்கு ஊதியம் குறைவாக இருந்தாலும் அதனை விட்டுவிட்டு நிச்சயமற்ற தன்மையில் உள்ள விவசாயப் பணிகளுக்கு திரும்ப தொழிலாளர்கள் மறுக்கின்றனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் முழுவதும் குறிப்பிட்ட சில நாட்களில் அறுவடைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அறுவடைக்கு முற்றிலுமாக எந்திரங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. மிகச் சிறிய பரப்பில் உள்ள நெல் வயல்களில் கூட அறுவடைக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. கடந்த காலங்களில் அறுவடைக்கு முன்னர் விளைந்து சாய்ந்த பயிர்களை முன்னுரிமை கொடுத்து அறுவடை செய்வது வழக்கம்.

    தற்போது அதுபோன்ற பயிர்களைக் கூட அறுவடை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. திருவாரூர் அருகே கமலாபுரத்தில் மழையால் சாய்ந்த முற்றிய கதிர்கள் பூமியில் பட்டு அதிலிருந்து நாற்றுகள் முளைத்துள்ளது. டெல்டாவில் பல இடங்களில் இதுபோன்ற நிலை உள்ளது. இது விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதே நிலை நீடித்தால் விவசாயம் கேள்விக்குறியதாகிவிடும். எந்திரங்களை மட்டுமே நம்பி நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில் புதிய திட்டங்களை தீட்டி அவர்களை அரசு பாதுகாக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை அரசு வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×