search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தஞ்சை நகைக்கடை அதிபர் மனைவி- 2 மகன்களை கொலை செய்தது ஏன்?

    திருச்சியில் தனியார் விடுதியில் தஞ்சை நகைக்கடை அதிபர் மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்தது ஏன்? என்று போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
    திருச்சி:

    திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மேலரண் சாலையில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணி கிராமத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் செல்வராஜ் (வயது 44) என்பவர் வாடகைக்கு அறை எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர் விடுதி அறையில் தனது மனைவி செல்லம் (43), மகன்கள் நிகில் (20), முகில் (14) ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரும் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருச்சி கோட்டை உதவி போலீஸ் கமி‌ஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர்கள் சண்முகவடிவேல், மணிவண்ணன் மற்றும் போலீசார் விடுதி அறைக்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நகைக்கடை அதிபர் செல்வராஜை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இன்று 2-வது நாளாக செல்வராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தஞ்சை நகைக்கடை அதிபர் திருச்சி ஓட்டல் விடுதியில் மனைவி மற்றும் மகன்களை கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்வராஜ் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

    செல்வராஜ் ஊரணியில் பல வருடங்களாக நகைக்கடை நடத்தி வருகிறார். இதில் அவருக்கு அதிக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது 20 வயது மகன் நிகில் மனவளர்ச்சி இல்லாமல் இருந்தார்.

    மகனின் நிலை கண்டு செல்வராஜ் கவலையில் இருந்தார். இது ஒருபக்கம் இருக்க, கடன் சுமை மறுபக்கம் அவரை வாட்டியது. இதனால் வாழ்க்கையில் விரக்கி அடைந்த அவர் இனி உயிர் வாழவேண்டாம் என முடிவு செய்தார். கடைசியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட முடிவு செய்தார்.

    மனைவியிடம் தற்கொலை முடிவை சொல்லவில்லை. கணவர் கோவிலுக்குத்தான் அழைக்கிறார் என்று மகன்களுடன் செல்லம் திருச்சிக்கு வந்தார். திருச்சி ஹோட்டலில் மேனேஜரிடம் கோவிலுக்கு செல்ல வந்துள்ளதாக கூறி செல்வராஜ் அறை எடுத்தார்.

    மேலாளரும் அதை நம்பி அறை கொடுத்துள்ளார். ஆனால் அறைக்குள் சென்றவர்கள் அதன் பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை. இதற்கிடையே அறைக்குள் தற்கொலை முடிவை மனைவியிடம் கூறிய செல்வராஜ் இந்த முடிவு குறித்து, தனது அக்காள் மகனுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பினார் .

    இதைப்பார்த்த அவர் தனது மாமாவின் முடிவை தடுத்து நிறுத்த செல்போனில் பலமுறை முயற்சித்துள்ளார். ஆனால் செல்வராஜ் போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உறவினர்களை அழைத்துக் கொண்டு திருச்சிக்கு வந்தார்.

    ஓட்டல் அறைக்கு மேனேஜருடன் சென்று பார்த்த போது அதற்குள் செல்வராஜ் மனைவி மகன்களை கழுத்தை அறுத்து கொன்று விட்டு அவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அதன்பிறகுதான் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தது. செல்வராஜ் தங்கியிருந்த அறையில் அவர் பயன்படுத்திய கத்தி மற்றும் உறவினர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    கடன் தொல்லையும், மகன் குறித்த கவலையும் செல்வராஜை மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாக்கி அவரது குடும்பத்தை அழிக்கும் அளவிற்கு சென்று விட்டதாக போலீசார் கூறினர். கடிதம் பற்றிய விபரம் உடனே தெரியவில்லை.

    இந்த துயர சம்பவத்துக்கு வேறு யாராவது காரணமாக இருந்தார்களா? என்றும் விசாரணை நடைபெற உள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செல்வராஜ் மயக்கம் தெளிந்த பிறகு அவரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். ஆனால் அவரது உடல் நிலையும் மோசமாக இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட செல்லம், மகன்கள் நிகில், முகில் ஆகியோரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
    Next Story
    ×