search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழிப்புணர்வு முகாமில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர்விழி பேசியபோது எடுத்த படம்.
    X
    விழிப்புணர்வு முகாமில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர்விழி பேசியபோது எடுத்த படம்.

    பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்பட்டால் விசாரணை குழுவிடம் புகார் செய்யலாம்

    நீதிமன்றங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் விசாரணை குழுவிடம் புகார் செய்யலாம் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர்விழி கூறினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பாலின பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான கொள்கை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் (பொறுப்பு), மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் கருப்பசாமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா வரவேற்று பேசினார்.

    முதன்மை அமர்வு நீதிபதி மலர்விழி பேசியதாவது;-

    பெண்களுக்கு எதிரான எந்தவொரு பாலின பாகுபாடும், பெண் சமத்துவத்திற்கு எதிரான தடைகள் ஆகும். பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்படிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. விசாகா மற்றும் சிலருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தொடர்ந்துள்ள வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, பாலியல் கொடுமைகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலை எதிர்ப்பதற்கான நடைமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றமும் அதற்கான கொள்கைகளை வகுத்துள்ளது.

    அவற்றை கருத்தில் கொண்டு அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு, பாலியல் தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் மாவட்ட நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் 9 பேர் கொண்ட பாலின புரிந்துணர்வு மற்றும் புகார்கள் மீதான விசாரணை குழுவிடம் புகார்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். அந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தி, அதில் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டால் குழு மூலம், சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டு புகார் தெரிவித்த நபர் குறித்த ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விசாரணை குழுவின் உறுப்பினரான வக்கீல் சந்தானலட்சுமி மற்றும் வக்கீல்கள் ராதாகிரு‌‌ஷ்ணமூர்த்தி, எழிலரசன், ராதா, மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் முத்துசெல்வி ஆகியோர் பேசினர். இதில் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி செய்திருந்தார்.
    Next Story
    ×