search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைநீர் சேகரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    மழைநீர் சேகரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    மழைநீர் சேகரிப்பு பணிகள் - கலெக்டர் ஆய்வு

    திருப்புல்லாணி யூனியனில் குடிமராமத்து மற்றும் பண்ணைக்குட்டை திட்டங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ராமநாதபுரம்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறையின் கீழுள்ள கண்மாய்கள், ஏரிகள், சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருந்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழுள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊருணிகளிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 384.41 மில்லி மீட்டர் அளவிலும், நவம்பர் மாதத்தில் இதுவரை 104.89 மில்லி மீட்டர் அளவிலும் சராசரியாக மழை அளவு பதிவாகி உள்ளது. இதன் காரணமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட எக்ககுடி மற்றும் மல்லல் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று அந்தந்த ஊர்களில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோல வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மழை நீரை வீணாகாமல் சேமித்து வறட்சியான காலத்தில் பாசனத்திற்காக பயன்படுத்த ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது சொந்த இடத்தில் பண்ணைக்குட்டை அமைப்பதற்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-ம் நிதியாண்டில் 520 பண்ணைக்குட்டைகளும், 2018-ம் நிதியாண்டில் 476 பண்ணைக்குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    நடப்பு நிதியாண்டில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்தில் 2,575 பண்ணைக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக விவசாயிகளிடம் இருந்து இதுவரை மொத்தம் 1,823 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் மொத்தம் 906 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 180 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

    திருப்புல்லாணி யூனியன் பனையடியேந்தல் கிராமத்தில் உள்ள விவசாயி வெள்ளி என்பவரது இடத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைத்துள்ள பண்ணைக்குட்டையை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து இத்திட்டத்தின் பயன் குறித்து சம்பந்தப்பட்ட விவசாயியிடம் கேட்டறிந்தார். அதற்கு அந்த விவசாயி, தனக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலத்தில் தற்போது மிளகாய் சாகுபடி செய்துள்ளதாகவும், பண்ணைக்குட்டை மூலம் பாசன வசதி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, வேளாண்மை துறை துணை இயக்குனர் சேக்அப்துல்லா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், ஆனந்த்பாபுஜி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×