
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டியில் பிரசித்தி பெற்ற பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரகு, அண்ணாதுரை ஆகியோர் பூசாரியாக உள்ளனர்.
இந்த நிலையில நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்த சாமி சிலைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள பூசாரி ரகுவின் தாயார் மகாலட்சுமி வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதைக்கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.