search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்கள்
    X
    குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்கள்

    அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை- நாராயணசாமி கண்டனம்

    அரசு எதை செய்தாலும் அதிகாரிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாகவும், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாகூர்:

    புதுவை அரசின் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குரல் என்ற மக்கள் குறைதீர்ப்பு முகாம் தொகுதி தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஏம்பலம் தொகுதியில் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மக்கள் குரல் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண் தலைமை வகித்தார்.

    குறைதீர்ப்பு முகாமை முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அரசின் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    குறை தீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை மனு பெற்ற முதலமைச்சர் நாராயணசாமி

    குறைதீர்ப்பு முகாமில் துறைவாரியாக ஸ்டால் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு பொதுமக்களிடம் குறைகளை அதிகாரிகள் நேரடியாக கேட்டறிந்தனர். வருவாய்த்துறை தொடர் பான சான்றிதழ்களையும் கேட்டு பெற்றனர்.

    விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    முகாமிற்கு 20 துறையில் இருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். நெட்டப்பாக்கம் தொகுதியில் நடந்த முகாமில் 80 சதவீத குறைகளை நிவர்த்தி செய்துள்ளோம்.

    கிராமத்தினர் குறைகளை கூற நகரத்துக்கு வருவதில்லை. மக்களுக்கு எந்த குறைகள் இருந்தாலும் அதனை தீர்க்க அரசு தயாராக உள்ளது. இங்கு புகார் கூறப்படும் குறைகளுக்கு 30 நாட்களுக்குள் சரியான தீர்வு காணப்படும்.

    கோவில் நிலம், அரசு புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு அதிகாரிகளிடம் பேசி பட்டா வழங்க முடிவெடுக்கப்படும்.

    அரசு எதை செய்தாலும் அதிகாரிகள் முட்டுக்கட்டையாக உள்ளனர். இதனால் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நாங்கள் திட்டத்தை கொண்டு வந்தால் அதனை நிறைவேற்ற வேண்டியது அதிகாரிகளின் வேலை.

    ஆனால், ஏதாவது குறைகளை கூறி கோப்புகளை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். இந்த முகாமிற்கு அரசு துறை செயலர்கள் வராததது கண்டனத்திற்குரியது.

    தலைமை செயலாளர், கல்வித்துறை செயலாளர் ஆகியோர் ஊருக்கு சென்று விட்டதால் இங்கு வர முடியாது என அனுமதி பெற்றனர்.

    மற்றவர்கள் பணியில் இருந்தும் முகாமிற்கு வரவில்லை. அரசின் திட்டத்தை சட்டத்தை மீறி செயல்படுத்த வேண்டியதில்லை. சட்டத்தை வளைத்தாவது செயல்படுத்த வேண்டும்.

    சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறையில் பல சாதனைகளை செய்து வருகிறோம்.

    மத்திய அரசும், கவர்னர் கிரண்பேடியும் உயர் அதிகாரிகளும் ஒத்துழைப்பு தந்தால் இந்தியாவில் முதன்மை மாநிலமாக புதுவையை கொண்டு வந்துவிடுவோம்.

    அவர்கள் அரசுக்கு துணையாக இருந்தால் எல்லாவற்றையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

    கூட்டத்தில் பங்கேற்காத செயலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இலவச அரிசிக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்தோம். அரிசியை வழங்க விடாமல் கவர்னர் தடுக்கிறார்.முதலில் மஞ்சள் கார்டுகளுக்கு அரிசி கொடுக்க வேண்டாம் என்றார். அதை ஏற்றுக் கொண்டோம். அதன்பிறகு எல்லா கார்டுகளுக்குமே அரிசி கொடுக்க கூடாது என தடுத்து விட்டார்.

    திட்டங்களை செயல்படுத்த விடாமல் அரசுக்கு பாதகமாக கவர்னர் தொடர்ந்து செயல்படுகிறார்.

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய விடாமல் தடுத்தார். போலீஸ் வேலைக்கு வயது தளர்வை செய்யவிடாமல் தடுத்தார். இவற்றை எல்லாம் பல முட்டுக்கட்டைகளுக்கு பிறகு நிறைவேற்றி இருக்கிறோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    Next Story
    ×