search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனாலி பிரதீப்
    X
    சோனாலி பிரதீப்

    மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்

    மொரீசியஸ் நாட்டில் நடந்த போட்டியில் கோவை பெண் பங்கேற்று திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

    சோனாலி பிரதீப் கடந்த 2015,16-ம் ஆண்டுகளில் திருமதி கோவை பட்டத்தையும், 2017-ம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற திருமதி இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றார்.

    மேலும் இவர் திறன் வளர்ப்பு குறித்து கோவையின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் மொரீசியஸ் நாட்டில் கடந்த 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற திருமதி இந்தியா யுனிவர்ஸ் என்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்றார். இந்த அழகி போட்டியில் 41 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் சோனாலி பிரதீப் திருமதி இந்தியா யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

    அழகி பட்டம் வென்று கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது சோனாலி பிரதீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த பட்டம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு திருமதி யுனிவர்ஸ் என்ற பட்டத்துடன் பியூட்டி வித் பர்பஸ் என்ற பட்டமும் கிடைத்துள்ளது.

    மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டி தொடரில் உடை உலங்காரம், சிகை அலங்காரம், நடை பாவனை மற்றும் பொது அறிவு உள்பட பல சுற்றுகள் நடந்தது.

    நேர்காணல் சுற்றில் பட்டம் பெற்ற பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வி கேட்டனர். அதற்கு நான் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண் கல்வி முக்கியத்துவம் ஆகியவற்றிற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என பதில் அளித்தேன். இது தான் எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

    நான் ஏற்கனவே மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றது இந்த போட்டியில் சுலபமாக போட்டியை சமாளிக்க உதவியது.

    அடுத்ததாக திருமதி யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்க உள்ளேன். எனக்கு கிடைத்த இந்த பட்டத்தை கோவை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வெற்றிக்காக எனக்கு ஊக்கம் அளித்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தேர்வு குழுவினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×