search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையர்களுடன் போராடிய தம்பதியர்
    X
    கொள்ளையர்களுடன் போராடிய தம்பதியர்

    நெல்லை வீரத் தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி- 2 பேர் கைது

    நெல்லை மாவட்டம் கடையம் அருகே தம்பதியரை தாக்கி கொள்ளையடிக்க முயன்றது தொடர்பான வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த தம்பதி சண்முகவேல்- செந்தாமரை. இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி இரவு தங்களது வீட்டில் இருந்த போது, அவர்களது வீட்டிற்குள் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் அரிவாளுடன் புகுந்தனர். அரிவாள் வைத்திருந்த நிலையில் கொள்ளையர்களுடன் தம்பதி இருவரும் போராடி விரட்டியடித்தனர்.

    வயதான தம்பதியினரின் தைரியமான இந்த செயலை பலரும் பாராட்டினர். மேலும் அவர்களது வீரதீர செயலை பாராட்டி கடந்த 15-ந்தேதி சென்னையில் நடந்த சுதந்திரதின விழாவில் அதீத துணிச்சலுக்கான சிறப்பு விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தம்பதி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் தொடர்பாக கடையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்களை அடையாளம் காண போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    தம்பதியின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையர்களுடன் தம்பதி நடத்தும் போராட்டம், அவர்களை விரட்டியடித்தது என அனைத்து காட்சிகளும் பதிவாகியிருந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

    ஆனால் சம்பவம் நடந்து 1½ மாதத்திற்கு மேலாகியும் போலீசாருக்கு துப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன் அபினவ் தெரிவித்தார்.

    இந்நிலையில் வயதான தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (35) உள்பட 2 பேர் சிக்கினர். பாலமுருகன் மீது பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறைக்கு சென்றுள்ளார்.

    பல்வேறு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில் தம்பதி வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்து 1½ மாதத்திற்கு பின் தற்போது கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×