search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் உடலை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்திய பெண்

    கணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை எரிக்க விடாமல் மனைவி தடுத்ததையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அடுத்துள்ள ஓடக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ்(வயது 61). விவசாயி. வாய் பேச முடியாதவர். இவருக்கு பகவதி(60) என்ற மனைவியும், காளியம்மாள்(35) என்ற மகளும் உள்ளனர்.

    நடராஜ் தனது மனைவியை பிரிந்து கடந்த 30 ஆண்டுகளாக தம்பி தங்கவேலுவுடன்(55) அவரது வீட்டில் வசித்து வந்தார். நடராஜின் மனைவி தனது மகளுடன் உடுமலையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடராஜ் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தங்கவேல் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்ற பின் நடராஜின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது.

    இதையடுத்து நடராஜை அவரது தம்பி தங்கவேல் வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த நடராஜ் சம்பவத்தன்று திடீரென உயிரிழந்தார்.

    இதையடுத்து தங்கவேல் தனது அண்ணனின் உடலை தகனம் செய்ய முடிவு செய்து சூலூரில் உள்ள எரியூட்டும் மயானத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து ஈமசடங்கு செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது மயானத்திற்கு நடராஜின் மனைவி பகவதி, மகள் காளியம்மாள் ஆகியோர் தங்கள் உறவினர்களுடன் வந்தனர். அவர்கள் நடராஜின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித் தங்கவேலுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு நடத்தி பிரேதத்தை கைப்பற்றி ஆம்புலன்சில் சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். நடராஜ் மனைவி பகவதி தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக கூறி சுல்தான்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×