search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயில் கருகிய வாழைகள்
    X
    தீயில் கருகிய வாழைகள்

    தீ விபத்தில் வாழைகள் எரிந்து நாசம் - அதிர்ச்சியில் விவசாயி உயிரிழப்பு

    தூத்துக்குடி அருகே தீ விபத்தில் 50 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசமானதையடுத்து அதிர்ச்சியில் விவசாயி உயிரிழந்தார்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மாதாங்கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன்ஆறுமுகம் (வயது45). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. அங்கு வாழைகள் பயிரிட்டிருந்தார்.

    இந்தநிலையில் ஆறுமுகத்தின் வாழை தோட்டத்தில் நேற்று திடீரென தீ பற்றியது. அப்போது காற்று வேகமாக அடித்ததால் அருகில் உள்ள தோட்டங்களுக்கும் தீ பரவியது. இதனால் அங்கிருந்த வாழை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. தனது வாழை தோட்டம் தீப்பிடித்து எரிவதை அறிந்த ஆறுமுகம் வந்தார்.

    தனக்கு சொந்தமான வாழைமரங்கள் கண் முன்னால் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரும், மற்ற விவசாயிகளும் தீயை அணைக்க போராடினர். ஆனால் காற்று வேகமாக அடித்ததால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதனால் ஆறுமுகம் மற்றும் மேலும் சிலரது தோட்டத்தில் இருந்த வாழை மரங்கள் எரிந்து நாசமாகின. கருகின. மொத்தம் சுமார் 50 ஆயிரம் வாழைகள் தீயில் கருகின. மேலும் அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட பனைமரங்களும் எரிந்து சாம்பலாகின.

    ஆறுமுகத்தின் தோட்டத்தில் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழை மரங்களும் கருகின. அதனை பார்த்து வேதனையடைந்த ஆறுமுகத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கருங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். தீயில் வாழைகள் கருகிய அதிர்ச்சியில் விவசாயி இறந்த சம்பவம் கருங்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் தீயை அணைக்க ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீ எரியும் இடம் மெயின் ரோட்டிலிருந்து தூரத்தில் இருந்ததால் தீயணைப்பு வாகனத்தை தீ விபத்து ஏற்பட்ட வாழை தோட்டங்களுக்கு அருகில் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே டியூப் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தீயை போராடி அணைத்தனர்.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பால கோபாலன், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், செய்துங்க நல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், தட அறிவியல் துறை உதவி இயக்குனர் கலா லெட்சுமி, செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் முத்து லெட்சுமி உள்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    வாழை தோட்டங்களில் தீப்பிடித்து எரிய காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுவழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


    Next Story
    ×