search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானில் அபூர்வ நிகழ்வாக சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றியபோது எடுத்த படம்
    X
    வானில் அபூர்வ நிகழ்வாக சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றியபோது எடுத்த படம்

    சூரியனை சுற்றி தோன்றிய அபூர்வ ஒளிவட்டம்

    வானில் அரிய நிகழ்வாக சூரியனை சுற்றி அபூர்வ ஒளிவட்டம் நேற்று பகலில் தோன்றியது.
    சென்னை:

    வானில் ஒரு அரிய நிகழ்வாக நேற்று காலை 10.30 மணியளவில் சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றியது. சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் இருந்த பொதுமக்கள் தங்களுடைய செல்போன்களில் இந்த அபூர்வ நிகழ்வை புகைப்படம் எடுத்தனர்.

    இந்த அபூர்வ நிகழ்வு குறித்து சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய இயக்குனர் (பொறுப்பு) எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தின் வடமாவட்டங்களில் சூரியனை சுற்றி ஒளிவட்டம் காணப்பட்டது. இதனை 22 டிகிரி ஒளிவட்டம் என்று வானியல் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். பூமியில் இருந்து வெகு உயரத்தில் ‘சிரஸ்’ வகை மேக கூட்டங்கள் பரவலாக காணப்படும்போது இதுபோன்ற ஒளிவட்டம் சூரியனை சுற்றி தோன்றும். இவ்வகை மேக கூட்டங்களின் அருங்கோண வடிவிலான மிகநுண்ணிய பனிகட்டி துகள்கள் பல அடுக்குகளில் காணப்படும்.

    சூரியனில் இருந்து வரும் ஒளி, இந்த துகள்களை ஒளிவிலகல் அடைய செய்யும். இந்த ஒளிவிலகலின் கோணம் 22 டிகிரி பாதையில் இருக்கும். இதனால் இது 22 டிகிரி ஒளிவட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    சூரிய கதிர்களில் உள்ள சிவப்பு வண்ணம் சற்று குறைவாக ஒளி விலகல் அடையும். அப்போது நீலவண்ணம் சற்று அதிகமாக ஒளிவிலகல் ஏற்படும். எனவே இவ்வகை ஒளிவட்டங்களில் உட்புறம் சிவப்பு நிறமும், வெளிப்புறம் நீலவண்ணமாகவும் காணப்படும்.

    இந்த ஒளிவட்டம் வானத்தில் மேககூட்டங்கள் இருக்கும் நேரத்தை பொறுத்து காணப்பட்டது. குறிப்பாக சில இடங்களில் அரை மணிநேரமும், சில இடங்களில் 2 மணிநேரமும் காணப்பட்டது. இதுகுறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் நிகழ்வு என்று கூற முடியாது. வானில் இயற்கையாக நடக்கும் அரிய நிகழ்வு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×