search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாசாலை
    X
    அண்ணாசாலை

    எல்ஐசி-ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் இருவழி போக்குவரத்து இன்று தொடங்குகிறது

    7 ஆண்டுகளுக்கு பிறகு எல்.ஐ.சி.- ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் இரு வழிப்பாதை போக்குவரத்து இன்று தொடங்குகிறது.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறது.

    வண்ணாரபேட்டை- விமான நிலையம் வழித்தடம் அண்ணாசாலையில் சுரங்கப்பாதையாக சைதாப்பேட்டை வரை செல்கிறது.

    சுரங்கப்பாதை மற்றும் எல்.ஐ.சி.-ஆயிரம் விளக்கு மெட்ரோ ரெயில் நிலையங்கள் கட்டுவதற்காக எல்.ஐ.சி.- ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் கடந்த 7 வருடங்களாக ஒருவழிப்பாதை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    எல்.ஐ.சி.யில் இருந்து டி.எம்.எஸ். செல்லும் வாகனங்கள் அனைத்தும் பேட்டர்ஸ்ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ வழியாக ஜெமினி செல்ல வேண்டும். இதனால் காலை மற்றும் மாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து அண்ணாசாலையை சீரமைத்து கடந்த ஜூன் மாதமே மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்படைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் துறை ரீதியான தாமதத்தால் தாமதமாகி வந்தது.

    தற்போது சாலை சீரமைக்கப்பட்டு எல்.ஐ.சி.- ஆயிரம் விளக்கு இடையே அண்ணாசாலையில் இரு வழிப்பாதை போக்குவரத்து இன்று தொடங்குகிறது.

    இனி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் இல்லாமல் இருவழிப்பாதையிலும் வாகனங்கள் செல்ல முடியும்.
    Next Story
    ×